கெரசின் ஊற்றிக்கொண்ட விவசாயி
சேலம் :சேலம், காடையாம்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேட்டை சேர்ந்த விவசாயி நடேசன், 42. இவர் தனது தாய் குழந்தையம்மாள், 63, மற்றும் இரு மகன்களுடன் மனு கொடுக்க நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு, நுழைவு வாயில் முன் தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து மீட்டு, முதலுதவி செய்தனர். அதன்பின், நடேசன் கூறியதாவது:எனக்கு சொந்தமான, 84 சென்ட் நிலம் கோட்டைமேட்டில் உள்ளது. அந்த நிலத்துக்கான வழித்தடத்தை, பக்கத்து நிலத்தை சேர்ந்தவர் ஆக்கிரமித்து கொண்டார். அதனால், பாதை தடைப்பட்டு, என்னுடைய நிலத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை தட்டிகேட்ட எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார். எனவே, தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.இது தொடர்பாக விசாரித்த சேலம் டவுன் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க தீவட்டிப்பட்டி போலீசாருக்கு பரிந்துரைத்துள்ளனர். இதற்கிடையே தற்கொலைக்கு முயன்று, நடேசன் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டதால், அவருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு, எரிச்சல் தாங்க முடியாமல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.