கடை வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும் ஆளும்கட்சியினர் மிரட்டுவதாக வியாபாரிகள் புகார்
ஓமலுார்:'கடை வேண்டுமென்றால், பணம் கொடுக்க வேண்டும்' என, ஆளும் கட்சியினர் மிரட்டுவதாக, காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் ஓமலுார் போலீசில் புகார் அளித்தனர்.சேலம் மாவட்டம், ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் தினசரி காய்கறி சந்தை அமைந்துள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகளை வைத்து, பல்வேறு பகுதிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடை கட்டித்தரக்கோரி, அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, 65 லட்சம் ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்டில், 40 கடைகள் கட்டப்பட்டு அமைச்சர்கள் நேரு, ராஜேந்திரன் ஆகியோரால், இரு மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.அப்போது, காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில், கடைகள் ஒதுக்க வேண்டும் என கோரி மனு வழங்கினர். உரிய வழிவகை செய்யப்படும், கூடுதலாக கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். இதில் காய்கறி சந்தையை ஏலம் எடுத்தவர்கள், 'தாங்கள் தேர்வு செய்யும் நபர்களுக்கு மட்டுமே, கடை வைக்க அனுமதி வழங்கப்படும்' என கூறியதால், புதிய இடத்தில் யாரும் கடைகள் அமைக்காமல், வழக்கம்போல் வியாபாரிகள் தரையில் கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர்.இதனால் சந்தை வளாகம் பூட்டிய நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த, 26ல், ஓமலுார் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில், ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகார் மனுவில், 'ஓமலுார் டவுன் பஞ்.,ஆளும் கட்சியினர், கவுன்சிலர்கள், தங்களுக்கு கடை வேண்டுமானால், 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் எப்படி கடை நடத்துகிறீர்கள் என பார்க்கலாம்' என, மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, காய்கறி சங்கம் மூலம் கடைகள் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இது குறித்து ஓமலுார் டவுன் பஞ்., தலைவி செல்வராணி கணவரும், தி.மு.க., ஓமலுார் நகர செயலருமான ரவிச்சந்திரன் கூறுகையில்,''இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. டெண்டர் எடுத்தவர் வேறு. டவுன் பஞ்., தலைவி மூலம், குலுக்கல் முறையில் புதிய கடைகளுக்கு நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடை கிடைக்காத நபர்களுக்கு, அப்பகுதியில் ெஷட் அமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது,'' என்றார்.