கூட்டு மீன் வளர்க்க விவசாயிகளுக்கு பயிற்சி
அயோத்தியாப்பட்டணம், அயோத்தியாப்பட்டணம், வெள்ளியம்பட்டியில் பண்ணை குட்டை மற்றும் திறந்தவெளி கிணற்றில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்து, உள் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி நேற்று நடந்தது. 'அட்மா' குழு தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். ரோகு, கட்லா, மிர்கால், கெண்டை உள்ளிட்ட வகைகள் வளர்ப்பு, மீன் குஞ்சு உற்பத்தி, பராமரிப்பு குறித்து, மீன் ஆய்வாளர் மனுநீதிச்சோழன் பேசினார். மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைப்பதன் முக்கியத்துவம், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் குறித்து தோட்டக்கலை உதவி அலுவலர் வெள்ளியங்கிரி பேசினார். உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் முக்கியத்துவம், இயற்கை உரங்களை பயன்படுத்துவது குறித்து, வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி விளக்கம் அளித்தார். பல்துறை அலுவலர்கள், துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினர். விவசாயிகள் பலர் பயன் அடைந்தனர்.