ரசாயன கலவை வீசி நகை கடையில் கொள்ளை முயற்சி துப்பாக்கியுடன் வந்த 2 பேர் சுற்றிவளைப்பு
ஆத்துார், நகை கடை உரிமையாளர்கள் மீது ரசாயன கலவை வீசி, கொள்ளையடிக்க முயன்ற, 2 பேர் சிக்கினர். அவர்களிடம் துப்பாக்கியை பறிமுதல் செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம் ஆத்துார், கடைவீதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன், 62. அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு, 8:30 மணிக்கு, 2 பேர் கடைக்கு வந்தனர். வைத்தீஸ்வரன், அவரது மனைவி செண்பகலட்சுமி, 50, கடை ஊழியர் வசந்தி, 55, ஆகியோர், டிராவில் இருந்த தலா, 2 பவுன் கொண்ட, 20 பவுன் நகைகளை காட்டினர். ஆனால் வேறு மாடல் நகைகளை கேட்டனர். ஆனால் கடை மூடும் நேரத்தில், 'மாடல்' அனைத்தும் காட்டும்படி கூறியதால் சந்தேகம் அடைந்தனர்.இருப்பினும் காட்டிய நகைகளை திரும்ப எடுத்து வைக்க முயன்றபோது, கண்ணாடி அணிந்திருந்த ஒருவர், அவர் வைத்திருந்த சிறு குளிர்பான பாட்டிலில் இருந்த ரசாயன கலவையை, கடையில் பணியாற்றிய, 3 பேரின் முகம், உடல்களில் வீசியதோடு, நகை பெட்டியை அபகரிக்க முயன்றனர். வைத்தீஸ்வரன் சுதாரித்து, நகை பெட்டியை கடைக்குள் எடுத்து போட்டார். அதே நேரம் மற்றொருவர், மற்றொரு குளிர்பான பாட்டிலில் இருந்த மிளகாய் துாள் பவுடரை தெளிக்க முயன்றார். அந்த பவுடர் வைத்திருந்தவரை, வைத்தீஸ்வரன் மடக்கிப்பிடித்தார். ரசாயன கலவையை வீசியவர், கடைவீதி வழியே தப்பி ஓடினார். கடை உரிமையாளர் கூச்சலிட, அப்பகுதி மக்கள், அந்த நபரை விரட்டிச் சென்றனர். ஒரு கி.மீ., சென்று, கிரைன்பஜார் அம்மா உணவகம் எதிரே, அந்த நபரை மடக்கிப்பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர், துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இருப்பினும் மக்கள், அந்த நபரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், கடையில் பிடிப்பட்டவர், தலைவாசல் அருகே சிறுவாச்சூரை சேர்ந்த மூர்த்தி, 52, என்பதும், அவர் மீது மோட்டார் திருட்டு வழக்கு உள்ளதும் தெரிந்தது. துப்பாக்கி வைத்திருந்தவர், பேச முடியாமல் இருந்ததால், அவர் குறித்த விபரம் தெரியவில்லை. இதுகுறித்து, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். ஆத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 100 மீ.,ல் உள்ள நகை கடையில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.4 பேர் 'அட்மிட்'வைத்தீஸ்வரன், செண்பகலட்சுமி, வசந்தி ஆகியோர் மீது, ரசாயன கலவை வீசியிருந்ததால், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கியுடன் பிடிபட்டவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வைத்தீஸ்வரன் கூறுகையில், ''முகத்தில் பசை போன்று பிடித்துள்ளது. முகம், கண்களில் எரிச்சல் உள்ளது. கண் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளோம். ஆசிட் போன்ற ரசாயனமாக இருந்தால் எங்கள் நிலை என்னவாகியிருக்கும். மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதியில் நடந்த இச்சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நகை கடை உள்ள சாலையில், போலீசார் கூடுதல் பாதுகாப்பு, ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.