ஓடைகள் சீரமைப்பு பணியை விரைவாக முடிக்க வலியுறுத்தல்
மேட்டூர், மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., சுகுமார் தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:கொளத்துார், நவப்பட்டி நாகராஜ்: மேட்டூர் கிழக்கு கால்வாய் கரையோரம் வளர்ந்துள்ள முட்செடிகளால் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் வாகனங்கள் செல்ல முடியவில்லை. முட்செடிகளை அகற்ற வேண்டும்.நங்கவள்ளி, சூரப்பள்ளி கார்த்திக்: என் தந்தைக்கு பிரதம மந்திரி விவசாயிகள் கவுரவ நிதி உதவி திட்டத்தில், ஆண்டுக்கு,6,000 ரூபாய் வந்தது. அத்தொகை சமீபகாலமாக வரவில்லை. அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து நங்கவள்ளி விவசாயிகள் சிலர், 'மேட்டூர் அணை நிரம்பினால், 100 ஏரிகளுக்கு உபரிநீர் திறக்கப்படும். ஆனால் அந்த ஏரிகளுக்கு நீர் செல்லும் ஓடைகளை சீரமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது. விரைவாக முடிக்க நடவடிக்கை தேவை' என்றனர். இவ்வாறு அவர்கள் பேசினர்.சுகுமார், 'கோரிக்கைகளுக்கு உரிய அலுவலர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். தாசில்தார் ரமேஷ், வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் பங்கேற்றனர்.