சட்டக்கல்லுாரி விடுதி உணவில் புழு; மாணவர்கள் புகாரால் வார்டன் மாற்றம்
சேலம்: சேலம் அரசு சட்ட கல்லுாரி யில், பாலியல் சீண்டல், வருகை பதிவேட்டில் முறைகேடு, 'மூட் கோட்' தேர்வில் குளறுபடி உள்ளிட்டவை நடப்பதாக, இறுதியாண்டு மாணவர்கள் சிலர் கடந்த, 17ல், சென்னையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் புகார் அளித்தனர். அதன் எதிரொலியாக, சட்ட கல்வி இயக்குனர் விஜயலட்சுமி தலைமையில், 3 பேர் குழுவினர், 19ல் கல்லுாரியில் விசாரித்தனர். அப்போது கல்லுாரி விடுதி மாணவியர் சிலர், மதிய உணவில் புழுக்கள் இருப்பதாக, ஆதாரத்துடன் குற்றம்சாட்டினர். ஆனால், இயக்குனர் விஜயலட்சுமி கண்டுகொள்ளவில்லை. இதை கண்டித்து, நேற்று காலை, 9:30 மணிக்கு மாணவ, மாணவியர், வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். இதை அறிந்து, ஆட்டையாம்பட்டி போலீசார் குவிக்கப்பட்டனர். கல்லுாரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால் பேச்சு நடத்தினார். அப்போது, 'மதிய உணவில் புழு இருப்பதை சுட்டிக்காட்டியும் கண்டுகொள்ளாத விடுதி வார்டனை உடனே மாற்ற வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். இதனால் முதல்வர், வார்டன் பணியில் இருந்த சுபாஷினியை விடுவித்தார். தொடர்ந்து உதவி பேராசிரியர் ஜெயசுதாவை வார்டனாக நியமித்தார். இதற்கான உத்தரவு நகலை காட்டிய பின், மாணவ, மாணவியர் வகுப்பறைகளுக்கு திரும்பினர்.