ஊராட்சியில் மக்கள் குறைகளை தீர்க்க தன்னார்வலர் அடங்கிய வாட்ஸாப் குழு
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில், 385 ஊராட்சிகள் உள்ளன. தலைவர்களின் பதவி காலம் முடிந்ததால், தனி அலுவலர் கட்டுப்பாட்டில், ஊராட்சி நிர்வாகம் உள்ளது. நேற்று முன்தினம், மாவட்டத்தில் உள்ள, 20 ஒன்றியங்களில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், ஊராட்சி நிர்வாகம் குறித்து, மண்டல துணை பி.டி.ஓ., ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோரிடம் பேசினார். அதில், ஒவ்வொரு ஒன்றியத்துக்கு தனி வாட்ஸாப் குழு தொடங்குதல்; அதில், ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலர்கள், மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த தன்னார்வலர்கள் இணைக்கப்பட வேண்டும்; தன்னார்வலர்கள் மூலம் வார்டின் குறைகளை வாட்ஸாப்பில் பதிவிட வேண்டும். அதை நிவர்த்தி செய்த பின்பும், பதிவிட வேண்டும். வாட்ஸாப் குழுவை, கலெக்டர், உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்பர் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், தனி அலுவலர் கார்த்திகேயன்(பொ), ஊராட்சி செயலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் தெரிவித்தவற்றை கூறி, அவற்றை பின்பற்ற வேண்டும்; தனி அலுவலர் காலத்தில் மக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தொய்வின்றி செய்ய அறிவுரை வழங்கினார்.