| ADDED : ஜன 26, 2024 10:00 AM
ஆத்துார்: ''தேவையற்ற வழக்குகளால் தாமதம் ஏற்படுகின்றன. வழக்குகள் குறைந்தால் கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்கும். உண்மை வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண முடியும்,'' என, உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி பேசினார்.சேலம் மாவட்டம் கல்வராயன்மலை, கரியகோவிலில் உள்ள கரியராமர் கோவிலில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் ஐம்பொன்னில் செய்யப்பட்ட கரியராமர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், அணில் உருவச்சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதில் பங்கேற்ற பின், அங்கு நடந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி பேசியதாவது:நான் மட்டும் வாழ வேண்டும். பக்கத்து வீட்டுக்காரன் சாக வேண்டும் என்ற அறியாமையில் செய்யும் சிறு தவறுகளால் தான் நீதிமன்றத்தில் அதிகளவில் வழக்குகள் வருகின்றன. நிலுவையில் வழக்குகள் அதிகம் உள்ளதற்கு இதுவே காரணம். பாகப்பிரிவினைக்கு வழக்கு தொடர்வர். அந்த வழக்கு, 50 ஆண்டு கூட நடக்கும். முதல் தலைமுறை இருவர் இறந்துவிட்டால் தீர்வு கிடைப்பது தாமதமாகிறது. இதனால் குடும்பத்தினர் நிம்மதி இழந்திருப்பர். அடுத்த தலைமுறையினர் சமரச தீர்வு பெறுகின்றனர். இதை முன்பே செய்திருந்தால் இறந்தவர்கள் வாழ்ந்திருப்பார்கள். நீதிமன்றம் குறித்து பலர் தவறான கருத்துகளை புரிந்து வைத்துள்ளனர். இதுகுறித்து எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை உள்ளது. தேவையற்ற வழக்குகளால் தாமதம் ஏற்படுகின்றன. வழக்குகள் குறைந்தால் கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்கும். உண்மை வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் பேசினார்.இதில், அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், மூத்த வக்கீல் தமிழ்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.