ஏரியில் சங்கிலியை வீசி தேடிய போது தொழிலாளி சடலம் சிக்கியது
மேட்டூர்: சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்த ராஜூ மகன் கார்த்திக், 20. பேனல் போர்டு கார்பென்டர் தொழிலாளி. நேற்று முன்தினம் மேச்சேரி அருகே, எம்.காளிப்பட்டி ஏரியில் குளித்தபோது, நீச்சல் தெரியாத அவர் மூழ்கிவிட்டார். மேட்டூர், நங்கவள்ளி தீயணைப்பு குழுவினர், தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவானதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி முதல், நங்க வள்ளி, மேட்டூர் அனல்மின் நிலையம், ஓமலுார் தீயணைப்பு குழுவினர், 50 பேர், கார்த்திக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். மதியம், 12:30 மணிக்கு ஏரிக்குள் கொக்கிகள் மாட்டிய சங்கிலியை போட்டு தேடியபோது, அதில் சிக்கி கார்த்திக் சடலம் மேலே வந்தது. சடலத்தை, தீயணைப்பு குழுவினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.