காரைக்குடி ஆவினுக்கு பால் வழங்கியோருக்கு ரூ.2.57 கோடி நிலுவை
சிவகங்கை, : காரைக்குடி ஆவின் நிர்வாகத்திற்கு பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.2.57 கோடி பால் கொள்முதல் விலையில் பாக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி ஆவின் நிர்வாகத்தின் கீழ் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர் சங்கம் 985 வரை இருந்தது. காலப்போக்கில் இந்த சங்கத்தின் எண்ணிக்கை 385 ஆக குறைந்துவிட்டன. இவற்றில் 577 சங்கங்களை கலைத்து விட்டனர். இச்சங்கங்களில் உள்ள 9000 உறுப்பினர்கள் 1.23 லட்சம் பசுக்களை வளர்க்கின்றனர். இவர்கள் மூலம் லிட்டருக்கு ரூ.28 முதல் 35 வரை வழங்குகின்றனர். இக்கொள்முதல் மூலம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 3 லட்சத்து 69 ஆயிரத்து 934 லிட்டர் பால் கொள்முதல் செய்துள்ளனர். அந்த வகையில் ஆவினுக்கு பால் கொள்முதல் செய்த பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2.57 கோடி வரை பால் தொகையில் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால், பால் உற்பத்தியாளர்கள் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கி போட முடியாமல் தவிக்கின்றனர். தொடர்ந்து காரைக்குடி ஆவினுக்கு தடையின்றி பால் வழங்க, பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.2.57 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.