விஷம் தின்ற 5 நாய்கள் பலி
தேவகோட்டை: தேவகோட்டை கைலாசநாதபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் சேலத்தில் பருத்தி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாலினி 37., குழந்தைகளுடன் தேவகோட்டையில் வசித்து வருகின்றனர். இவர் வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்தனர். தினமும் இவருடைய நாய்களுக்கு உணவு வைக்கும் போது அந்த தெருவில் வசிக்கும் மேலும் நான்கு நாய்களுக்கு உணவு வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் உணவு வழங்கினார். இரவு 11:30 மணிக்கு நாய்கள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த சாலினி அதிர்ச்சி அடைந்தார். தனது இரண்டு நாய்களும், தெருநாய்களும் ஒவ்வொன்றாக இறந்து விழுந்தன. சாலினி சி.சி. டிவி கேமரா பதிவுகளை பார்த்த போது இரவு ஒரு பெண் நாய்க்கு ஏதோ போடுவது பதிவாகி இருந்தது.சாலினி போலீசில் புகார் செய்தார். சி.சி டிவி பதிவுகளின் படி அந்த வழியாக சென்ற பெண்ணைப் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.