| ADDED : ஜூலை 28, 2024 06:05 AM
திருப்புவனம் : திருப்புவனம் அருகே லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்புகளை கடந்த ஆறு மாதங்களாக அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகின்றனர்.86 ஏக்கர் பரப்பளவுள்ள லாடனேந்தல் கண்மாயில் ஒரு சிலர் தென்னை, வாழை உள்ளிட்டவைகளை பயிரிட தொடங்கிய நிலையில் பொதுப்பணித்துறை கண்டு கொள்ளாததால் 50க்கும் மேற்பட்டோர் கண்மாயை 40 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் லாடனேந்தலைச் சேர்ந்த விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததை அடுத்து கோர்ட் ஒரு மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.கடந்த மார்ச் 11ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் இயந்திரங்களுடன் ஒரு சில போலீசார் பாதுகாப்புடன் வந்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக கூறவே அதிகாரிகள் திரும்பி சென்றனர். மீண்டும் மார்ச் 15ம் தேதி மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். கண்மாயின் உட்பகுதியில் செங்கல் தொழிற்சாலை, ஆறாயிரத்து 348 தென்னை மரங்கள் உள்ளிட்டவை ஆக்ரமிப்பில் இருந்தன. இதனையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதாக கூறிய உடன் அதிகாரிகள் திரும்பி சென்றனர். நேற்று வரை ஆயிரத்து 500 மரங்கள் வரையே வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து நேற்று தாசில்தார் விஜயகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பூமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரங்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் சிறிது சிறிதாக அகற்றி வருகிறோம் என அதிகாரிகளிடம் வலியுறுத்தவே இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. விவசாயிகள் தரப்பில் கூறுகையில்: கண்மாயின் ஒருபகுதியில் தண்ணீர் தேக்கப்பட்டு விவசாயம் நடந்து வருகிறது. மறுபகுதியில் தென்னை மரங்கள் தான் பயிரிட்டுள்ளோம், 40 வருடங்களுக்கு மேலாக தென்னை மரங்களை வளர்த்து பாதுகாத்து வருகிறோம், தென்னை மரங்களை நம்பி தட்டி, விசிறி பின்னும் தொழில்கள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் ஆறாயிரம் மரங்களை வெட்டினால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும், எனவே தமிழக அரசு எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், என்றனர்.