காரைக்குடியில் சாலையோர வியாபாரிகளிடம் அடாவடி வசூல்
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட பல மடங்கு வசூல் செய்வதாக வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். காரைக்குடியில் விநாயகர் சதுர்த்தியான நேற்று சாலையோரம் விநாயகர் சிலை, பொரி கடலை, பூமாலை, பழக்கடை உட்பட ஏராளமான சாலையோரக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. சாலையோர கடைகளில், வழக்கத்தை விட இரண்டு, மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூல் செய்ததாக வியாபாரிகள் புகார் கூறிய நிலையில் நகர் முழுவதும் கண்டன சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது. வியாபாரிகள் கூறுகையில், சாலையோர கடைகளில் சாதாரண நாட்களிலேயே அதிக அளவு கட்டண வசூல் நடக்கிறது. தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விழா காலங்களில் இரு மடங்கு பணம் கேட்பார்கள். ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு பல மடங்கு பணம் கேட்டது கலக்கத்தை ஏற்படுத்தியது. சிறிய கடைக்கு ரூ.200, 300 கொடுத்தால் எதுவுமே மிஞ்சாது. வியாபாரிகள் கடை அமைத்தும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் ஏமாற்றத்துடன் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.