கிராம உதவியாளர் கொலை விவசாயிக்கு ஆயுள் தண்டனை
சிவகங்கை: சிவகங்கையில் கிராம உதவியாளரை வெட்டிக்கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்துார் அருகே உள்ள அங்காளன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் 51, விவசாயி. இவர் ஆலங்கோட்டை கண்மாய் பகுதியில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தார். இந்த கிராம உதவியாளராக ராதாகிருஷ்ணன் 52 பணி புரிந்தார். இவர் வி.ஏ.ஓ.,வுடன் சேர்ந்து கடந்த 2019 செப்.,30ல் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு ராதாகிருஷ்ணன் தான் காரணம் என்று கணேசன் கருதினார். ஆத்திரம் அடைந்த கணேசன் அன்று மாலை டூவீலரில் சருகணிக்கு சென்ற ராதாகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.திருவேகம்பத்துார் போலீசார் கணேசனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன் விசாரித்தார். கணேசனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.