கால்வாய் கரையில் சுவர்; விவசாயிகள் புகார்
திருப்புவனம்; மடப்புரம் கண்மாயில் நீர் வரத்து கால்வாய் கரையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி கதவு வைத்து பூட்டிய சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மடப்புரம் கண்மாயை நம்பி ஆயிரத்து 200 ஏக்கரில் நெல், வாழை, கரும்பு பயிரிடப்படுகிறது. வைகை ஆற்றின் இடது பிரதான கால்வாய் மூலம் மடப்புரம் கண்மாய்க்கு நீர் வரத்து கால்வாய் அமைந்துள்ளது, ஏழு கி.மீ.,துாரமுள்ள இக்கால்வாய் வடகரை கிராமத்தின் வழியாக செல்கிறது.வடகரை கால்வாய் கரையின் மறுபுறம் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று விவசாய நிலத்தை வாங்கி சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளது. சுற்றுச்சுவர் மடப்புரம் கண்மாய்க்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் கரையில் அமைந்துள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.வடகரையைச் சேர்ந்த கார்த்திகேயன் கூறுகையில்: மடப்புரம் கண்மாய் வரத்து கால்வாயை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளனர். மடப்புரம் கால்வாய் வழியாக கணக்கன்குடி, ஏனாதி கண்மாய்க்கும் தண்ணீர் செல்கிறது. கால்வாய் ஆக்கிரமித்திருப்பது குறித்து புகார் அனுப்பியும் இதுவரை அதிகாரிகள் வரவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.