உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை பெரியாறு பாசன கால்வாய்  சுத்தம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை பெரியாறு பாசன கால்வாய்  சுத்தம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கால்வாய்களை சுத்தம் செய்து கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48 வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி 1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 129 கண்மாய்களுக்குட்பட்ட 6,038 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதேபோல் மாணிக்கம் கால்வாய், சிங்கம் புணரி கால்வாய், மறவமங்கலம் உள்ளிட்ட விஸ்தரிப்பு மற்றும் நீட்டிப்பு கால்வாய் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. பெரியாறு ஒரு போக பாசனத்தில் கடைமடைப்பகுதியாக இருப்பது சிவகங்கை மாவட்டமாகும். பெரியாறு தண்ணீர் வரும் செப்.15ம் தேதி சிவகங்கை பகுதிக்கு திறக்கப்பட உள்ள நிலையில் பெரியாறு பாசன கால்வாய்கள் முட்புதர் மண்டியும், ஆங்காங்கே சேதமடைந்தும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 48 வது மடை கால்வாய் முழுவதும் முள் புதர் மண்டியுள்ளது. இவற்றை பொதுப்பணித்துறையினர் சீரமைத்து கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வழி செய்ய வேண்டும்.திருமலை விவசாயி அய்யனார் கூறுகையில், பெரியாறு பாசன 48 வது மடை கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் அழகமாநகரி, அழகுநாச்சிபுரம், நாமனுார், லெட்சுமிபுரம், கருத்தம்பட்டி, அலவாக்கோட்டை உள்ளிட்ட கிராம கண்மாய்களுக்கு செல்கிறது. பின்னர் பெரியாறு உபரி தண்ணீர் அலவாக்கோட்டை கண்மாயில் இருந்து சருகணி ஆறாக மாற்றம் பெறுகிறது.இந்த 48ம் மடை கால்வாய் முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் 129 கண்மாய்கள் மூலம் 20 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீர் வழங்கப்படும். பொதுப்பணித்துறையினர் கால்வாய்களில் முளைத்துள்ள முட்செடிகளை அகற்றம் செய்து சீரமைத்து செப்.15 ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீரால் அனைத்து கண்மாய்களும் பாசன வசதி பெற வழிவகை செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !