அரசு அறிவித்த பால் கொள்முதல் விலை வழங்குவது அவசியம்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
சிவகங்கை : சிவகங்கையில் அரசு அறிவித்தபடி பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் ஆவின் நிர்வாகத்தின் கீழ், 395 பால் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த கொள்முதல் நிலையங்கள் மூலம் 9056 உறுப்பினர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் தினமும் 57,000 லிட்டர் கொள்முதல் செய்து, 49 முதல் 50 ஆயிரம் லிட்டர் பால் வரை ஆவின் நிர்வாகத்திற்கு வழங்குகின்றனர். எஞ்சிய 7000 லிட்டர் பாலை உள்ளூரில் விற்பனை செய்கின்றனர். மாவட்ட அளவில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு, லிட்டருக்கு ரூ.35 வரை வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், இங்குள்ள பெரும்பாலான பால் கொள்முதல் நிலையங்களில் லிட்டருக்கு அதிக பட்சமே ரூ.32 மட்டுமே வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. எனவே ஆவின் நிர்வாகம் அரசு அறிவித்த கொள்முதல் விலையை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.