மழை இல்லாமல் வாடும் வாழை வேதனையில் விவசாயிகள்
இளையான்குடி: இளையான்குடி அருகே கிராமங்களில் மழை இல்லாததால் வாழைக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காத நிலையில் வாழை மரம் வாடி வருவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.இளையான்குடி அருகே கீழநெட்டூர், வேலடிமடை, குறிச்சி,பிராமணக்குறிச்சி, கோச்சடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் விளைவிக்கப்படும் வாழைத்தார், இலைகள், பூக்கள், காய் அருகில் உள்ள பரமக்குடி, இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் மொத்த வியாபாரிகள் நேரடியாக வயல்களுக்கும் வந்தும் வாங்கி செல்கின்றனர்.போதுமான மழை இல்லாததாலும் கிணறுகளில் நீர் இல்லாத காரணத்தினாலும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் வாழை வாடி வருகின்றன. இதனால் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.