உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் கையை அறுத்த பெண் ஊழியர்; பழி வாங்குவதாக மாநகராட்சி கமிஷனர் மீது புகார்

காரைக்குடியில் கையை அறுத்த பெண் ஊழியர்; பழி வாங்குவதாக மாநகராட்சி கமிஷனர் மீது புகார்

காரைக்குடி; சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சித்ரா தன்னை பழிவாங்கும் நோக்கில் அதிக பணிகளை தருவதாக கூறி இளநிலை உதவியாளர் ஷர்மிளா பர்வீன் 25, கத்தியால் தன் கையை அறுத்துக்கொண்டார்.காரைக்குடி அருகே அரியக்குடியை சேர்ந்த ராஜ்கபூர் மனைவி ஷர்மிளா பர்வீன் மாநகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறார். தற்போது வரிவசூல் பிரிவில் கேஷியராக உள்ளார். நேற்று காலை அலுவலகம் வந்த ஷர்மிளா பர்வீன், ஆப்சென்ட் போடப்பட்டுள்ளதாக கூறி கமிஷனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பழிவாங்கும் நோக்கில் அதிக அளவு பணி கொடுப்பதாகவும் அவர் மீது புகார் கூறினார். சிறிது நேரத்திற்கு பிறகு அலுவலக அறை முன்பு கத்தியால் தன் கையை கிழித்துக்கொண்டு மாநகராட்சி வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் மற்றும் கணவர் ராஜ்கபூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.கமிஷனர் சித்ரா கூறியதாவது: பணிச்சுமை அனைவருக்குமே உள்ளது. ஆண்டு வரவு செலவு கணக்கு என்பதால் அனைவருமே காலை 8:30 முதல் இரவு 9:00 மணி வரை வேலை செய்கிறோம். ரூ. 7.50 கோடி வரி வசூல் செய்ய வேண்டி உள்ளது. மார்ச் மாதத்திற்குள் வசூலிக்க வேண்டும் என்பதால் அனைத்து பணியாளர்களுமே கூடுதல் பணி செய்து வருகின்றனர். தற்போது வரி வசூல் அதிகம் உள்ளதால் ஷர்மிளாவிற்கு கேஷியர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் என்னை குறிவைத்து பணிச்சுமை வழங்குவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அலுவலகத்திற்குள் சத்தம் போட்டதால் போலீசாரிடம் தெரிவித்தேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதுபோன்று நடக்கிறார். பணி செய்ய கூறியதற்காக மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்

ஷர்மிளா பர்வீன் கூறியதாவது: இரு மாதங்களாக அலுவலகத்தில் வேலையிலும் தனிப்பட்ட விஷயத்திலும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். நேற்று வழக்கம் போல் காலை 9:15 மணிக்கு வந்துவிட்டேன். இன்ஜி., பிரிவில் வேலை கொடுத்தார்கள். அதை தான் செய்தேன். மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்? என்ன வேலை செய்கிறாய் என்று கமிஷனர் கேள்வி கேட்டார். நான் பில் போட்டு விட்டேன். டி.டி., போடும்படி சொன்னதால் அந்த வேலையை செய்கிறேன் என்றேன். நீ எதற்கு எடுத்தாலும் எதிர்த்து பேசுகிறாய் என்று கமிஷனர் கோபமடைந்தார். எனக்கு வெளியே சொல்ல முடியாத அளவிற்கு பல பிரச்னை தருகின்றனர். நேற்று வழக்கமான நேரத்திற்கு வந்தும் ஆப்சென்ட் போட்டனர். கமிஷனர் அறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அனைத்தும் பதிவாகி இருக்கும். என் மேல் தவறு இருந்தால் அதை வைத்து நிரூபிக்கட்டும். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பிரச்னையை வெளியில் சொல்ல முடியாததால் இம்முடிவுவை எடுத்தேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி