| ADDED : ஜூலை 23, 2024 05:18 AM
கீழடி: கீழடி அருங்காட்சியகத்தில் சுற்றுலா பயணிகளின் உடமைகளை பாதுகாக்க லாக்கர் வசதி இருந்தும் பயன்பாட்டிற்கு வராததால் பாதுகாப்பின்றி வெளியிலேயே வைத்து விட்டு செல்கின்றனர்.கீழடியில் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் பானைகள், அணிகலன்கள், பாசிகள், மணிகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டு மார்ச்சில் தொடங்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கு தினமும் 2,000 பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தை கண்டு ரசிக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் உள்ளிட்ட பலரும் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை பாதுகாக்க லாக்கர் வசதி வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து அருங்காட்சியக டிக்கெட் வழங்கும் கவுண்டர் அருகே லாக்கர் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை லாக்கர் வசதி பயன்பாட்டிற்கு வராததால், மாற்றுத் திறனாளிகள் செல்லும் சாய்வுதள நுழைவு வாயிலில் இடையூறாக சுற்றுலா பயணிகள் தங்கள் சுமைகளை பாதுகாப்பின்றி வைத்து விட்டு செல்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுகளில் அருங்காட்சியகத்திற்கு பார்வையாளர்கள் மூலமும், கேமரா உள்ளிட்டவற்றிற்கு மூலமும் வருவாய் கிடைத்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கும் உரிய வகை செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் விலையுயர்ந்த பொருட்களான லேப்டாப், ஆவணங்களை வேறு வழியின்றி வெளியிலேயே வைத்து விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது: ஆறு கட்டடங்களில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில கட்டடங்களில் முதல் தளங்களிலும் பொருட்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். சுமைகளுடன் அனைத்தையும் பார்க்க முடியாது. சுமைகளை வைத்து பாதுகாக்க லாக்கர் வசதியை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.