| ADDED : ஜூலை 15, 2024 04:50 AM
மானாமதுரை, : மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் வெளியேறும் பகுதியில் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் அவதிக்குள்ளாகி வருகின்றன. மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து தினந்தோறும் மதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, திருச்சி, சென்னை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு 400க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்க்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் வெளியேறும் பகுதியில் உள்ள ரோடு குண்டும்,குழியுமாக பஸ்கள் செல்ல முடியாத அளவிற்கு இருப்பதினால் டிரைவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பள்ளங்களில் பஸ்கள் ஏறி இறங்கும்போது பஸ்களில் பயணம் செய்யும் கர்ப்பிணிகள், முதியவர்கள், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து மானாமதுரை பயணிகள் கூறியதாவது: மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து ஏராளமான ஊர்களுக்கு சென்று வருகிற நிலையில் பஸ்கள் வெளியேறும் இடத்தில் ரோடு குண்டும், குழியுமாக பள்ளங்களாக காட்சியளிப்பதால் சிரமப்பட்டு வருகிறோம். ரோட்டில்உள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும்.