முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா துவங்கியது
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி பால்குடத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு 69 வது மாசி பங்குனி திருவிழா நேற்று காலை கணபதி பூஜை, கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டினர்.மார்ச் 18 ஆம் தேதி கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 19 ஆம் தேதி காவடி, பால்குடம் எடுத்தல்,பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.மாலையில் கரகம் பருப்பூரணியில் சேர்த்தல், இரவு காப்பு பெருக்குதல் நடக்கிறது. மார்ச் 20 இரவு அம்மன் திருவீதி உலா 21 ஆம் தேதி சந்தன காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் விஸ்வநாத், கணக்கர் சரவணன் செய்து வருகின்றனர்.