உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரிசி ஆலைகளில் புகை, கழிவு நீர் சுத்திகரிப்பு  மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் வலியுறுத்தல்

அரிசி ஆலைகளில் புகை, கழிவு நீர் சுத்திகரிப்பு  மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் வலியுறுத்தல்

சிவகங்கை: மாவட்ட அளவில் இயங்கும் அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் புகை துகள், நெல் ஊற வைத்த கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வது கட்டாயம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலை உரிமையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் புதுவயல், பள்ளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் முன்பு 150க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கின. இங்கு நெல்லை ஊற வைத்து, அரைத்து அரிசியாக்கி தரம் பிரித்து சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.இந்நிலையில் அரிசி ஆலைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து தினமும் நெல்லை பாய்லரில் போட்டு வேக வைக்கும் போது, புகை போக்கியில் இருந்து ஒருவித துாசியுடன் கூடிய புகை பரவும். அதே போன்று நெல்லை ஊறவைப்பதன் மூலம் அக்கழிவு நீர் திறந்த வெளியில் விடப்படுகிறது.அரிசி ஆலை கழிவு நீர், புகை துாசுகளால் பாதிக்கப்படுவதாக மக்கள் புகார் கூறினர். மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிப்படி அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் புகை மாசு மற்றும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்படுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வலியுறுத்தி வருகிறது.

கூட்டம்

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேற்று சிவகங்கை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி பொறியாளர் சவுமியா உள்ளிட்டோர் ஆலோசனை வழங்கினர். அதில், அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் புகை மூலம் துாசு பரவுவதை தடுக்கவும், நெல் ஊறவைத்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, விவசாய நிலங்களுக்கு வழங்க வேண்டும் என அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ