சிவகங்கை, டிச.20-சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதியில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிக்கு முன் 12,29,933 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின் வாக்காளர்கள் எண்ணிக்கை 10,79,105 ஆக குறைந்துள்ளது.
சிவகங்கையில் கலெக்டர் பொற்கொடி வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் ஜெபிகிரேசியா, மானாமதுரை தேர்தல் அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், திருப்புத்துார் தேர்தல் அலுவலர் சிவபாலன், கலெக்டர் பி.ஏ., (பொது) விஜயகுமார் மற்றும் தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். * எஸ்.ஐ.ஆர்.,க்கு பின் வாக்காளர் 10.79 லட்சம்: நான்கு சட்டசபை தொகுதிகளில் 2025 அக்., 27 ம் தேதி நிலவரப்படி ஆண்கள் 6,02,622, பெண்கள் 6,27,251, இதரர் 60 வாக்காளர் என மொத்தமாக 12,29,933 வாக்காளர்கள் இருந்தனர். ஓட்டு சாவடிகளும் 1,364 ஆக இருந்தது. 2002 ம் ஆண்டு நடந்த வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலுடன் ஒப்பிட்டு, 2025 ல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்றது. நேற்று வெளியிடப்பட்ட பட்டியல்படி நான்கு தொகுதிகளிலும் ஆண்கள் 5,29,634, பெண்கள் 5,49, 437, இதரர் 34 பேர் என 10,79,105 வாக்காளர்கள் உள்ளனர். கூடுதல் ஓட்டுச்சாவடிகள் 154யை ஏற்படுத்தியதன் மூலம் மொத்த ஓட்டுச்சாவடி 1,518 ஆக அதிகரித்துள்ளது.