மகளிர் உரிமை தொகை கோரி ஆக.1 வரை 19,580 பேர் மனு
சிவகங்கை : மாவட்ட அளவில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்' மூலம் ஆக., 1 வரை மகளிர் உரிமை தொகை கோரி 19,580 பேர் மனு செய்துள்ளனர். தமிழக அளவில் திங்கள் தவிர அனைத்து நாட்களிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்' நடத்தி மக்களிடம் அனைத்து துறை சார்ந்த மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்ட அளவில் திங்கள் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் தாலுகாவிற்கு 4 முதல் 6 முகாம் வரை நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில், மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பித்தும், கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உங்களுடன் ஸ்டாலின் முகாமில், பிற துறை சார்ந்த மனுக்களை தவிர மகளிர் உரிமை தொகை கோரி தான் அதிகளவில் பெண்கள் மனு அளிக்க வருகை தருகின்றனர். ஆக., 1 ம் வரை நடந்த முகாம் மூலம் மாவட்ட அளவில் மகளிர் உரிமை தொகை கோரி 19 ஆயிரத்து 580 பேர் மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களை குறைதீர் பிரிவில் கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.