சிவகங்கையில் புதுமைப்பெண் திட்டத்தில் 2681 பேர் பயன்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயின்று வரும் 49 கல்லுாரிகளைச் சார்ந்த 2,681 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிகருப்பன் தொடங்கி வைத்தார்.காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லுாரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் இரண்டாம் கட்டமாக துவக்கி வைக்கப்பட்டுள்ள புதுமைப் பெண் விரிவாக்க திட்ட நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி முன்னிலை வகித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயின்று வரும் 49 கல்லுாரிகளைச் சார்ந்த 2 ஆயிரத்து 681 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 57 கல்லுாரிகளில் 4,500 மாணவிகள் பயன்பெற்று வருவதுடன், நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள விரிவாக்க திட்டம் வாயிலாக மாவட்டத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 181 மாணவிகள் பயன்பெறவுள்ளனர்.நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் உமா மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, புனித மைக்கேல் பொறியியல் கல்லுாரி தாளாளர் ஸ்டாலின், தாசில்தார் முபாரக் உட்பட அரசு அலுவலர்கள் மாணவிகள் கலந்துகொண்டனர்.