சிவகங்கையில் போலீசை கண்டித்து 4 பேர் தற்கொலை முயற்சி
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களை தாக்கிய வழக்கில் போலீசார் கைது செய்து துன்புறுத்துவதாக கூறி பாதிக்கப்பட்ட பாலமுருகன் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். சிவகங்கை நேருபஜார் பாலமுருகன் 25. இவர் செப்., 28 இரவு 10:00 மணிக்கு டூவீலர் விபத்தில் காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு பயிற்சி டாக்டர்கள் பாலமுருகனுக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது எடுக்கப்பட்ட சி.டி., ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே ரிசல்ட்களை அலைபேசி மூலம் பணியில் இருக்க வேண்டிய டாக்டர்களுக்கு பயிற்சி டாக்டர்கள் அனுப்பி சந்தேகம் கேட்டுள்ளனர். இதில் பயிற்சி டாக்டர்களுக்கும், பாலமுருகன் குடும்பத்தாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டனர். இதை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 7க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் சூர்யா 25, சுப்பிரமணியன் 40, சுப்பிரமணியன் (என்ற) சுப்புடு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 4 பேர் தற்கொலை முயற்சி இந்நிலையில் குடும்பத்தினரை சிவகங்கை போலீசார் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்து பெண்களை தாக்கி தொடர்ந்து உறவினர்கள், நண்பர்களை கைது செய்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய தனக்கு நியாயம் வேண்டும் என கேட்டு பாலமுருகன், அவரது தாய் போதும்பொண்ணு 50, அக்கா பவித்ரா 27, சித்தி நாகஜோதி 45, ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்றனர். போலீசார் அவர்களை மீட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.