உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழப்பசலை கால்வாயில் அளவீடு செய்ய 4 கிராம மக்கள் எதிர்ப்பு: அதிகாரிகள் சமரசம்

கீழப்பசலை கால்வாயில் அளவீடு செய்ய 4 கிராம மக்கள் எதிர்ப்பு: அதிகாரிகள் சமரசம்

மானாமதுரை: மானாமதுரை வழியாக செல்லும் கீழப்பசலை கால்வாயை தனியார் மடத்தைச் சேர்ந்தவர்கள் அளவீடு செய்வதாக கூறி 4 கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசலை, மேலப்பசலை,சங்கமங்களம், ஆதனுார் ஆகிய 4 கிராம கண்மாய்களுக்கும் வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய் அமைந்துள்ளது.இந்த கால்வாய் மூலம் வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது தண்ணீர் மேற்கண்ட 4 கிராம கண்மாய்களுக்கும் செல்லும் .இந்த தண்ணீரை கொண்டு 15 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயம் நடந்து விடுகிறது.இந்த கால்வாய் மானாமதுரை நகர் பகுதி வழியாக செல்வதால் அப்பகுதிகளில் உள்ளவர்கள் கழிவு நீரை கால்வாயில் விடுகின்றனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் ஏராளமானோர் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டியுள்ளதால் கால்வாயின் அகலம் சுருங்கி விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இக்கால்வாயை துார் வாரி சர்வே செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை அகற்ற வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே கால்வாயை ஒட்டி தனியார் மடத்திற்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளன. இதில் ஒரு கட்டடம் கால்வாயை மிகவும் ஒட்டி இருப்பதால் அது கால்வாய்க்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதனை அகற்ற வேண்டுமென்று 4 கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந் நிலையில் தனியார் மடத்தைச் சேர்ந்தவர்கள் கட்டடம் உள்ள இடம் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக கூறி வருகின்றனர். மேலும் அடிக்கடி அப்பகுதியில் கால்வாயின் ஓரத்தில் கட்டடத்தை ஒட்டி தடுப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கிராம மக்கள் அதனை தடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தனியார் மடத்தைச் சேர்ந்தவர்கள் கட்டடத்தை ஒட்டி சர்வேயர்களை கொண்டு அளவீடு செய்ய முற்பட்டனர். இதையறிந்த மேற்கண்ட 4 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்தி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மானாமதுரை போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இது குறித்து கீழப்பசலை,மேலப்பசலை,சங்கமங்கலம் ஆதனுார் ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தனியார் மடத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி கால்வாயை சேதப்படுத்தி வருகின்றனர். நேற்றும் கால்வாயில் அத்துமீறி நுழைந்து இயந்திரத்தை கொண்டு சேதப்படுத்தி விட்டனர். கால்வாய் இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கீழப்பசலை கால்வாய் முகப்பிலிருந்து முடியும் இடம் வரை சர்வே செய்து கொடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் சர்வே செய்யப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றவும், கழிவு நீரை கால்வாயில் விடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை