உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை நகராட்சியில் முதல் நாளில் 721 மனுக்கள்

சிவகங்கை நகராட்சியில் முதல் நாளில் 721 மனுக்கள்

சிவகங்கை; சிவகங்கை நகராட்சியில் உள்ள கடைசி 5 வார்டுகளுக்கு நேற்று நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 721 மனுக்கள் பெறப்பட்டது.சிவகங்கை நேரு பஜாரில் உள்ள மஹாலில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. சேர்மன் துரைஆனந்த் துவக்கி வைத்தார். கமிஷனர் கிருஷ்ணாராம், பொறியாளர் முத்து கலந்து கொண்டனர். நேற்று நடந்த முகாமில் 13 துறையினர் கலந்து கொண்டனர். இதில் 23,24,25,26,27 வார்டுகளை சேர்ந்த 721 பேர் மனு அளித்தனர். மகளிர் உரிமைத்தொகைக்கு 454 மனு, பிற மனுக்கள் 267 பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அதிகாரிகளால் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.முகாம் நடக்கும் ஒரு வாரத்துக்கு முன்பு வீடு வீடாகச் சென்று மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர். இதற்காக சிவகங்கை நகராட்சி சார்பில் 14 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு தன்னார்வலர் ஒரு நாளைக்கு 60 வீடுகளுக்கு சென்று அவர்களிடம் முழு விவரமும் பெற்று ஆன்லைன் செயலியில் ஏற்றி முகாமிற்கான படிவத்தை கொடுக்க வேண்டும். அந்த படிவத்திலேயே மகளிர் உரிமைத்தொகை குறித்த விவரமும் பெறப்படுகிறது. ஆனால் நகராட்சிக்குட்பட்ட முகாம் நடக்கும் பகுதிகளில் தன்னார்வலர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று படிவம் கொடுப்பதில்லை என்று மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், சிவகங்கையில் உள்ள 27 வார்டுகளுக்கும் 5 கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட உள்ளது. நகரில் உள்ள 10 ஆயிரத்து 500 குடும்பங்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த திட்டம் குறித்து விளக்குவதற்கு முகாம் நடக்கும் ஒரு வாரத்திற்கு முன்பே தன்னார்வலர்கள் மக்களின் வீட்டிற்கே சென்று அவர்களின் விவரம் பெற்று முகாமிற்கான படிவம் கொடுத்து வருகின்றனர். மக்கள் மனு கொடுத்த 45 நாட்களுக்குள் அவர்களது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். படிவம் கிடைக்காத பொதுமக்கள் நேரடியாக முகாமிற்கு சென்று தங்களின் சான்றுகளை பதிவு செய்து மனு கொடுக்கலாம். மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுடைய பெண்கள் அனைவரும் முகாமில் மனு அளிக்கலாம். தன்னார்வலர்களிடம் அனைத்து வீடுகளுக்கும் செல்லவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்கள் இல்லாத வீடுகளில் மட்டும் படிவம் கொடுப்பதில்லை. படிவம் கொடுக்கும் போது அந்த பயணாளியின் முழுவிவரம் பெற்று செயலியில் பதிவேற்றம் செய்த பிறகே படிவம் கொடுக்க முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை