மாவட்டத்தில் 9 லட்சம் வாக்காளர்களை சரி பார்க்க வேண்டும்: கலெக்டர் தகவல்
சிவகங்கை, அக்.30-- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2002 ல் எடுக்கப்பட்டபோது, 9 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். 2025 ல் 3 லட்சம் வாக்காளர் அதிகரித்து, 12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில், 2002 தீவிர திருத்த பட்டியலுடன் 3 லட்சம் வாக்காளர்கள் ஒத்து போகின்றனர். எஞ்சிய 9 லட்சம் வாக்காளர்கள் குறித்து தீவிர சிறப்பு திருத்தம் மூலம் சரிபார்க்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். சிவகங்கையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடந்தது. கலெக்டர் பி.ஏ.,(பொது) விஜயகுமார் முன்னிலை வகித்தார். தேர்தல் தாசில்தார் மேசியதாஸ் சிறப்பு திருத்தம் குறித்து விளக்கம் அளித்தார். கூட்டத்தில் பா.ஜ.,மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, காங்., நகர் தலைவர் விஜயகுமார், ஆம் ஆத்மி மாவட்ட செயலாளர் பெரியார் ராமு, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், நகராட்சி துணை தலைவர் கார்கண்ணன், வழக்கறிஞர் பாஸ்கரன், அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் தேவதாஸ், தே.மு.தி.மு.க., நகர் நிர்வாகி தர்மராஜா, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் மரியதிரவியம், கார்த்திக் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் மோகன், முன்னாள் செயலாளர் வீரபாண்டியன் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: சேங்கைமாறன் (தி.மு.க.,): இளையான்குடி, திருப்புவனத்தில் 10 ஆயிரம் பேர் வரை வெளிநாட்டில் வசிக்கின்றனர். அவர்களது வாக்காளர் பட்டியலை எப்படி சரி செய்வது. கலெக்டர்: வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஆன்லைனில் கூட அனுப்பலாம். இது குறித்து ஆலோசிக்கப்படும். மோகன் (மார்க்சிஸ்ட்): வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியை அவசர கதியில் நடத்துவதையும், அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்காமல் இப்பணியை மேற்கொள்வதை கண்டிக்கிறோம். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு அளிக்கிறோம். பெரியார் ராமு (ஆம் ஆத்மி): சிறப்பு தீவிர திருத்தம் குறித்து முழுமையான விளக்கத்தை அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கவில்லை. இத்திருத்த விஷயத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே 20 நாட்களுக்கு ஒரு முறை இப்பணி குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். வீரபாண்டியன் (மார்க்சிஸ்ட்): கிராமங்கள் நிறைந்த இம்மாவட்டத்தில் காலை வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று, மாலை வீடு திரும்புவர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு பூட்டியிருப்பதாக தகவல் தந்தால், அது போன்ற வாக்காளர் விபரங்களை எப்படி சேகரிக்க முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது. கலெக்டர்: இச்சிறப்பு தீவிர திருத்தம் 2002 ல் எடுக்கப்பட்டபோது, 9 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். 2025 ல் 3 லட்சம் வாக்காளர் அதிகரித்து, 12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில், 2002 தீவிர திருத்த பட்டியலுடன் 3 லட்சம் வாக்காளர்கள் ஒத்து போகின்றனர். எஞ்சிய 9 லட்சம் வாக்காளர்கள் குறித்து தீவிர சிறப்பு திருத்தம் மூலம் சரிபார்க்க வேண்டும் இவ்வாறு விவாதம் நடந்தது.