கற்கள் பெயர்ந்து பள்ளம் நிறைந்த சாலை
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட சாலைகளை பழுது பார்க்கவும், புதிய சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டும் சாலை சரி செய்யப்படாததால் விவசாயிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 45 ஊராட்சிகளில் 173 கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களுக்கு சாலை வசதி செய்யப்பட்டுள்ளன. தார்ச்சாலையை பராமரிக்கவும், புதிய சாலை அமைக்கவும் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் சாலை மேம்பாட்டு பணி நடப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.பல சாலைகள் நடக்க கூட பயனில்லாத அளவிற்கு உள்ளன. திருப்புவனம் புதூரில் இருந்து தவளைக்குளம் கண்மாய் செல்லும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இரண்டு கி.மீ.,துாரமுள்ள தார்ச்சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலங்களில் இதில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் டூவீலரில் வருபவர்கள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில் : திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட சாலைகளை பராமரிக்கவும், மேம்படுத்தவும் ஒரு கோடி ரூபாய் முதல் ஒன்றரை கோடி வரை ஒதுக்கப்படும், தவளைக்குளம் சாலையை புதுப்பிக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அனுப்பி உள்ளோம், நிதி ஒதுக்கப்பட்ட உடன் பணிகள் நடை பெறும், என்றனர்.