பா.ஜ., நிர்வாகி கொலையில் தலைமறைவானவர் சிக்கினார்
சிவகங்கை: பா.ஜ., நிர்வாகி கொலையில் தலைமறைவாக இருந்த வாலிபரை, போலீசார் நேற்று மதுரையில் கைது செய்தனர். சிவகங்கை பா.ஜ., வர்த்தக பிரிவு செயலர் சதீஷ்குமார், 51. சிவகங்கை வாரச்சந்தை நகராட்சி கடையில், டூ - வீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வந்தார். இவரிடம் மணிபாரதி என்பவர் பணிபுரிந்தார். மெக்கானிக் ஷாப் அருகே ஒரு அறையில் இருவரும் தங்கியிருந்தனர். அந்த அறைக்கு அருகே டிரம்செட் வாசிக்கும், திருப்புத்துார், வடவன்பட்டி செந்தமிழ்செல்வன் , 19, திருப்புத்துார், குறிஞ்சி நகர் ஆனந்த், 19, உட்பட சிலர் தங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும், ஆக., 28ம் தேதி இரவு, 11:30 மணிக்கு மது அருந்தினர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மணிபாரதியை டிரம்செட் வாசிக்கும் குழுவினர் தாக்கினர். இதை விலக்க வந்த சதீஷ்குமாரை, இக்கும்பல் தாக்கி தள்ளிவிட்டதில் சதீஷ்குமார் இறந்தார். இதில் தொடர்புடைய ஏழு பேரை, நகர் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில், இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த கார்த்திக், 21, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.