மானாமதுரையில் காட்டு பன்றிகள் நடமாட்டம் தடுக்க நடவடிக்கை
மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார கிராம பகுதிகளில் விவசாயத்தை அழிக்கும் காட்டு பன்றிகளை எதிர்கொள்வது, சமாளிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மானாமதுரை பகுதியில் மிளகனூர், பனிக்கனேந்தல், மேலப்பசலை, கீழமேல்குடி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களிலும் இதே போன்று இளையான்குடி, திருப்புவனம் சுற்று வட்டார கிராம பகுதிகளிலும் காட்டுப்பன்றிகளால் நெல், கரும்பு, வாழை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை அழித்து வருவதினால் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வேளாண்மை, வனத் துறை, கால்நடைத்துறை யினர் நிலங்களில் ஆய்வு செய்தனர். அப்போது ஏராளமான விவசாயிகள் அவர்களிடம் வருடம் தோறும் கடன் வாங்கி இப்பகுதிகளில் விவசாயம் செய்து வருகிற நிலையில் காட்டு பன்றிகள் அழித்து வருவதால் மிகவும் நஷ்ட மடைந்து வருவதால் கடனாளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து மேற்கண்ட 3 துறைகளின் அதிகாரிகள் காட்டுப்பன்றிகளை எதிர்கொள்வது அதனை சமாளிப்பது குறித்து ஆலோசனை வழங்கி காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.