ஒன்றிய அலுவலக கோடவுனில் வேளாண்மை அலுவலகம்
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் வேளாண்மை அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்படாததால் ஒன்றிய அலுவலக கோடவுனுக்கு அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.இவ்வொன்றிய அலுவலக வளாகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் வட்டார வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. இக்கட்டடத்தின் கூரை சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலை இருந்தது. இதனால் புதிய கட்டடம் கட்ட ஒன்றிய அலுவலக வளாகத்தின் பின்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இடத்தை அளந்து ஒதுக்கி தராததால் கட்டடத்திற்கு நிதி ஒதுக்குவது தாமதமாகி வருகிறது.இந்நிலையில் பாழடைந்த கட்டடத்தில் இனியும் பணிபுரிவது ஆபத்து என்பதால் அருகே உள்ள ஒன்றிய அலுவலக கோடவுனுக்கு வேளாண் அலுவலக கட்டடம் மாற்றப்பட்டுள்ளது. அந்த கட்டடமும் ஏற்கனவே பழுதடைந்த நிலையில், மேலோட்டமாக மராமத்து செய்து அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.வேளாண் அலுவலகம் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரம், விதை உள்ளிட்ட மானிய பொருட்களை வைக்க போதிய இடம் இல்லாமல் அலுவலர்கள் தவித்து வருகின்றனர்.எனவே வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட விரைந்து இடம் அளவீடு செய்து ஒதுக்கி தர வேண்டும்.