தி.மு.க., அமைச்சர்கள் மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு
சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் வேம்பங்குடி கிராமத்தில் கிராவல் மண் கொள்ளை நடப்பதாக கூறி அக்கிராம மக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.இந்த போராட்டத்தில் அ.தி.மு.க., மற்றும் த.வெ.க.,வினர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டவர்களும், தமிழக வெற்றி கழகம் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து பாரதி தலைமையில் நகர செயலாளர் தாமரைப்பாண்டி உள்ளிட்ட த.வெ.க., உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.தி.மு.க., அரசுக்கு எதிராகவும், கிராவல் மண் கொள்ளைக்கு எதிராகவும் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க.,வும், த.வெ.க.,வும் கைகோர்த்தது சிவகங்கை அரசியல் கட்சியினரிடம் பேசும் பொருளாக மாறியுள்ளது. கூட்டம் முடிந்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க சென்றபோது அதை தவிர்த்தார். கிராம மக்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தி பேசுவதற்காக தான் வந்தோம் என்றார்.முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், மாவட்டம் முழுவதும் கிராவல் மண் கொள்ளை நடக்கிறது. அதை அரசு அதிகாரிகள் தடுக்கவில்லை. அமைச்சர்கள் கனிம வள கொள்ளை மூலம் கிடைக்கும் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால் விவசாயிகள் விவசாயத்திற்கு கண்மாயில் உள்ள தண்ணீரை எடுத்தால் அதை தடுக்கின்றனர். வேம்பங்குடி கிராமத்தில் அரசு விதியை மீறி பல அடி ஆழத்திற்கு கிராவல் மண் அள்ளியுள்ளனர். வேம்பங்குடியில் நடந்துள்ள கிராவல் மண் கொள்ளையை அதிகாரிகள் ஆய்வு செய்து அதில் அரசு விதியை மீறி மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.