உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அஜித்குமார் கொலை வழக்கு: இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

அஜித்குமார் கொலை வழக்கு: இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

திருப்புவனம்:நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். ஜூன் 27ல் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்த நகை திருடு போனது. இது தொடர்பான மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையின் போது கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் ஜூன் 28ல் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 12 முதல் சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரிக்கின்றனர். மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி ஆக.,20க்குள் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சி.பி.ஐ., அதிகாரிகள் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் தொடங்கி மடப்புரம் கோயில் வரையிலான பாதையில் உள்ள சி.சி.டி.வி.,காட்சிகள்,உயிரிழந்த அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என 23 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 30ல் தனிப்படை போலீசார் கண்ணன், ராஜா, பிரபு, ஆனந்த், சங்கரமணிகண்டன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன், மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் ஆகியோர் ஜூலை 1 முதல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்று (ஆக., 20) சி.பி.ஐ., தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையில் மேலும் சில விபரங்கள் வெளி வரலாம். பேராசிரியை நிகிதாவின் கார் பார்க்கிங்கை விட்டு வெளியே செல்லாதது, நகை திருட்டு சம்பவம் உண்மையிலேயே நடந்ததா என்பது உள்ளிட்ட விபரங்கள் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ