பறவைகள் சரணாலயத்தில் திறந்தவெளி கிணற்றால் பயணிகளுக்கு ஆபத்து
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பறவைகள் சரணாலயத்தில் திறந்தவெளி கிணற்றால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.இவ்வொன்றியத்தில் கொள்ளுகுடிப்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து ஆகஸ்டில் வரத்துவங்கும் பறவைகள், இனப்பெருக்கத்திற்கு பிறகு மீண்டும் குஞ்சுகளுடன் மார்ச்சில் தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்லும்.இடைப்பட்ட காலத்தில் சுற்றுவட்டார கண்மாய்கள், கடற்கரை வரை சென்று இரைதேடி மாலையில் கூடு திரும்பும். இப்பறவைகளைப் பார்க்க சீசன் நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கண்மாயில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் பாதை அருகே திறந்தவெளி கிணறு உள்ளது. இது மழைக்காலங்களில் முழு அளவில் நிரம்பி ஆபத்தான நிலையில் உள்ளது. கிணற்றில் யாரும் தவறி விழுந்து விடாமல் இருக்க முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறை செய்ய சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.