குடும்பத்திற்கு பாதுகாப்பில்லை ராணுவ வீரரின் குமுறல் வீடியோ
முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே ஏனாதியை சேர்ந்த ராணுவ வீரர் முரளிஜெகன், 25, பூடான் எல்லையில் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன், ஏனாதி கிராமத்தில் வசிக்கும் இவரது தாய் முத்துமீனாள், மனைவி உமாராணி ஆகியோரை நிலப்பிரச்னையில் உறவினர்கள் சிலர் தாக்கினர். இதையறிந்த முரளிஜெகன் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், 'இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன். போர் பதற்றத்துடன் பணிபுரிகிறேன். இந்நிலையில், நிலப்பிரச்னையால் என் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லை.இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.இந்த வீடியோ பரவியதையடுத்து, முத்துமீனாள் புகாரில், அவரது உறவினர்கள் ராமச்சந்திரன் உட்பட ஆறு பேர் மீதும், எதிர்தரப்பினர் புகாரில் முத்துமீனாள், உமாராணி, புஷ்பம் ஆகிய மூவர் மீதும் பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.