உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு 2 வது நாளாக மறியல் போராட்டம்

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு 2 வது நாளாக மறியல் போராட்டம்

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் முன் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி 2வது நாளாக நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலம் சங்கர் 29, ஆட்டோ டிரைவரான இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். 3 நாட்களுக்கு முன்பு சங்கர் காரில் சென்ற போது தாயமங்கலம் ரோட்டின் நடுவே நின்ற டூவீலரை எடுத்த போது பாண்டி மகன் செல்வகுமார் 28, என்பவருக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் சங்கர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தாயமங்கலம் முத்துவேல் 27,செல்வகுமார் 28,பிரேம்குமார் 22,வீரமணியை இளையான்குடி போலீசார் கைது செய்தனர். திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் சங்கரின் மனைவி 3 மாத கர்ப்பமாக உள்ளார். கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி சங்கரின் உடலை வாங்காமல் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், சமுதாய அமைப்பை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., ஜெபி கிரேசியா, தாசில்தார் முருகன், டி.எஸ்.பி., அமல அட்வின் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் மாலை 6:00 மணிக்கு கலைந்து சென்றனர். நேற்று 2 வது நாளாக காலை 10:00 மணி முதல் கண்ணமங்கலம் அருகே தாயமங்கலம் விலக்கு ரோட்டில் அமர்ந்து மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் மாவட்ட எஸ்.பி., யை சந்தித்து மனு கொடுக்க வந்தவர்கள் நேற்று இரவு 9:00 மணி வரை சிவகங்கை பழையகோர்ட் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !