உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெற்றிலை விவசாயிகளுக்கு மானியம் இல்லாததால் தவிப்பு

வெற்றிலை விவசாயிகளுக்கு மானியம் இல்லாததால் தவிப்பு

திருப்புவனம்:திருப்புவனத்தில் வெற்றிலை சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் எந்த வித மானியம், வழங்கப்படாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். தென் மாவட்டங்களில் சோழவந்தானுக்கு அடுத்தபடியாக திருப்புவனத்தில் வெற்றிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. நாட்டு வெற்றிலை, கற்பூரம் ஆகிய ரகங்கள் புதூர், கலியாந்தூர், வெள்ளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படுகிறது. 5 விவசாயிகள் கூட்டாக சேர்ந்து வெற்றிலை பயிரிடுகின்றனர். ஏக்கருக்கு மூன்று லட்ச ரூபாய் வரை செலவு செய்து பயிரிடுகின்றனர். வெற்றிலை பயிரிடுவதற்கு முன்னதாக அகத்தி விதையை நடவு செய்கின்றனர். ஒரு குழிக்கு ஐந்து விதை வீதம் விதைக்கின்றனர். இதில் அதிகபட்சமாக மூன்று கன்றுகள் வரைதான் வரும். ஏக்கருக்கு ஒரு கிலோ அகத்தி விதை தேவைப்படும், கடந்தாண்டு அகத்தி விவசாயம் குறைந்ததால் ஒன்றரை கிலோ 1500 ரூபாய் என வாங்கி பயிரிட்டனர். இந்தாண்டு ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. வெற்றிலை, அகத்தி இரண்டும் தோட்டக்கலைத்துறையின் கீழ் வந்தாலும் அதிகாரிகள் வெற்றிலை, அகத்தி விவசாயத்திற்கு எந்த வித உதவியும் செய்வதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். திருப்புவனம் தாலுகாவில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெற்றிலை தற்போது வெறும் 60 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. திருப்புவனம் வெற்றிலை, அகத்தி கீரை உள்ளிட்டவைகள் மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில்: வெற்றிலை விவசாயத்தில் நஷ்டம் அதிகரித்து வருவதால் அதனை பயிரிடும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதிகமாக மழை பெய்தால் அழுகி விடும். மழை இல்லாவிட்டால் காய்ந்து விடும்.வெற்றிலையில் நோய் தாக்குதலும் அதிகம், வெற்றிலையில் நஷ்டம் ஏற்பட்டால் இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. மானிய விதையில் நெல், உளுந்து, நிலக்கடலை வழங்கப்படும் நிலையில் இதுவரை வெற்றிலை விவசாயத்திற்கு எந்த வித மானியம், கடன் உதவி வழங்கப்படவில்லை என விவசாயிகள் சோகத்துடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ