பிள்ளைவயல் பூச்சொரிதல் விழாவில் கலை நிகழ்ச்சிக்கு போலீஸ் தடை கலெக்டரிடம் பா.ஜ., புகார்
சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை யொட்டி கலைநிகழ்ச்சி நடத்த போலீஸ் தடை விதித்ததால், பா.ஜ.,வினர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜூலை 11 அன்று பல்வேறு கோயில்களில் இருந்து பெண்கள் பூத்தட்டுக்களை எடுத்து, ஊர்வலமாக பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வருகை தருவர். அங்கு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தி வழிபட்டு செல்வர். அன்றைய தினம் நகரில் ஆடல் பாடல், கலைநிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பூச்சொரிதல் விழாவிற்கான கலைநிகழ்ச்சி, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். கலெக்டரிடம் புகார்
பா.ஜ., நகர் தலைவர் உதயா கூறியதாவது: சிவகங்கை இன்ஸ்பெக்டரிடம் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டோம். அவர் டி.எஸ்.பி.,யிடம் அனுமதி பெற்று கொள்ளுமாறு கூறிவிட்டார். சிவகங்கை டி.எஸ்.பி., அமல அட்வினிடம் கேட்ட போது, அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் விழா கமிட்டி தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். வழக்கத்திற்கு மாறாக பூச்சொரிதல் விழா முடிந்து மறுநாள் கலைநிகழ்ச்சி நடத்த கூறுகிறார். விழாவிற்கு பாதுகாப்பு தர வேண்டியது போலீஸ் கடமை என்பதை மறந்து மறுப்பு தெரிவித்ததால் கலெக்டரிடம் புகார் செய்தோம் என்றார்.