குட்டி கொடைக்கானல் ஆன பிரான்மலை
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் உள்ள மலைத்தொடர்களில் மேகங்கள் ஊடுருவி செல்வதால் அப்பகுதி குட்டி கொடைக்கானல் ஆக மாறி, தீபாவளி விடுமுறைக்கு வந்தவர்கள் இரட்டை மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகம் முழுதும் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், நேற்று பிரான்மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள அசரீரி விழுந்தான் மலை உள்ளிட்ட மலைத்தொடர்களில் மழை மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் சாரலுடன் குளு குளுவென காட்சி அளித்து, குட்டி கொடைக்கானல் ஆன சூழல் நிலவியது. அப்பகுதியை சேர்ந்த பலர் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த நிலையில் இப்பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலையை கண்டு மகிழ்ந்தனர். பலரும் குடும்பத்துடன் பிரான்மலை, அசரீரி விழுந்தான்மலை, மேலவண்ணாரிருப்பு மலைப்பாதை வழியாக பயணித்து இயற்கையின் அழகையும், இதமான சூழலையும் அனுபவிக்கின்றனர். வெளியூர்களில் இருந்து பலரும் இப்பகுதிக்கு குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர். பாதுகாப்புக்காக போலீசார், வனத்துறையினர் கூடுதல் ரோந்துப் பணியில் ஈடுபட அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.