உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் செங்கலுக்கு தட்டுப்பாடு

மானாமதுரையில் செங்கலுக்கு தட்டுப்பாடு

மானாமதுரை: மானாமதுரையில் உள்ள காளவாசல்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் தொடர் மழை காரணமாக செங்கல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மண் தன்மை காரணமாக 100க்கும் மேற்பட்ட காளவாசல் இங்கு செயல்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் செங்கல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.மானாமதுரை பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல்களுக்கென்று தனி மவுசு இருப்பதால் செங்கல்களுக்கு எப்போதும் தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும்.3 ஆயிரம் செங்கல் ரூ.28 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரம் வரை விற்பனையாகிறது.அதேபோன்று வயர் கட் சேம்பர் செங்கல் ரூ.32 ஆயிரத்திலிருந்து ரூ.34 ஆயிரம் வரை விற்பனையாகிறது.கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகவும், தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் ஏராளமான காளவாசல்களில் செங்கல் இருப்பு இல்லாததால் கட்டடங்களை கட்டுவோர் செங்கல் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சேம்பர் உரிமையாளர்கள் கூறியதாவது: மானாமதுரையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நுாற்றுக்கும் மேற்பட்ட சேம்பர்களும், 200க்கும் மேற்பட்ட காளவாசல்களும் செயல்பட்டு வந்தன. தொழிலாளர்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்தனர். கடந்த சில வருடங்களாக இத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறி சென்றதாலும் தற்போது சேம்பர்களில் வேலை செய்வதற்கு போதுமான தொழிலாளர்கள் கிடைக்காமல் காளவாசல்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்ட காரணத்தினாலும் காளவாசல்களில் வேலை நடைபெறவில்லை.கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த மழை காரணமாகவும் செங்கல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ