சீரமைப்பு மேற்கொள்ளப்படாத பாலங்கள்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள் முறையாக சீரமைக்கப்படாததால் வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் உப்பாறு, பாலாறு இணைந்து திருப்புத்துார் வரை பாலாறு என்ற பெயரிலும், அதை தாண்டி விருசுழியாறு என்ற பெயரிலும் செல்கிறது. இந்த ஆறுகளில் கட்டப்பட்ட பாலங்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் வலுவிழந்து வருகிறது.அணைக்கரைப்பட்டி அருகே உப்பாற்றில் உள்ள தரைமட்ட பாலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அருகே பாலாற்றில் உள்ள பாலம், வேங்கைப்பட்டி ரோடு, சிவபுரிபட்டி ரோடு, முறையூர் ரோடு ஆகிய இடங்களில் அடுத்தடுத்து உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டது.பாலத்திற்கு அடியில் மண்ணரிப்பு, சீமைக் கருவேல மரங்கள் வளர்வதால் பாலங்களில் வெடிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சிவபுரிபட்டி செல்லும் சாலையில் உள்ள பாலாற்று உயர்மட்ட பாலத்தில் மேல்பகுதி வெடிப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது.பாலத்திற்கு அடியில் சில மீட்டர் துாரத்தில் மணல் அள்ளப்படுவதாலும், சீமைக் கருவேல மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றாததாலும் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்து வருகிறது.