பக்கவாட்டில் வளரும் செடிகள் ஆட்டம் காணும் பாலங்கள்
திருப்புவனம்: மதுரை - - பரமக்குடி 4 வழிச்சாலையில் உள்ள பாலங்களில் செடிகள் வளர்வதால் பாலங்களின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது. மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலையை ஒட்டியே பல இடங்களில் அகல ரயில் பாதை வருவதால் சாலையை கடக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டுஉள்ளன. திருப்புவனம், மணலூர், சிலைமான், லாடனேந்தல் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பபட்டு தடையில்லா போக்குவரத்து நடந்து வருகிறது. பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் உள்ள இடைவெளிகள் மற்றும் உட்புற பகுதிகளில் அரச மரம், ஆலமரம், வேம்பு மரம் உள்ளிட்டவைகள் தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்றன. இவற்றின் வேர்கள் ஐந்து மீட்டர் தூரம் வரை செல்ல கூடியவை. மழை காலங்களில் வேர்கள் மிக ஆழமாக செல்லும், இதனால் பாலங்களில் இடைவெளிகள் அதிகரித்து கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுகின்றன. நான்கு வழிச்சாலையில் பாலங்கள், ரோடுகள் பராமரிப்பதல் அலட்சியம் காட்டுவதால் பாலங்கள் பலவற்றிலும் செடிகள் வளர்ந்து மரமாக மாறி வருகின்றன. மணலூர் பாலத்தின்இருபகுதிகளிலும் மரங்கள்வளர்ந்துள்ள நிலையில் உட்புற பகுதிகளில் கருவேல மரங்கள் வளர்ந்து இருசக்கர வாகன ஓட்டிகளை பதம் பார்த்து வருகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாலங்களில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.