கோர்ட் உத்தரவு புறக்கணிப்பு கீழச்சிவல்பட்டிக்கு வராத பஸ்கள்
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கீழச்சிவல்பட்டிக்குள் கோர்ட் உத்தரவின்படி பஸ்கள் வந்து செல்வதை ஆய்வு செய்ய போக்குவரத்து அலுவலருக்கும்,தனியார் பஸ் உரிமையாளருக்கும் வருவாய்த்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். திருப்புத்துாரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ.துார விலக்கு ரோட்டில் கீழச்சிவல்பட்டி உள்ளது. இவ்வழித் தடத்தில் 10 டவுன் பஸ்கள் மட்டுமின்றி மதுரை -தஞ்சாவூர் சென்ற அரசு போக்குவரத்துக் கழக 23 பஸ்கள் கீழச்சிவல்பட்டிக்குள் சென்று பயணிகளை ஏற்றிச் சென்றது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்ந்து இருவழிச்சாலை அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கீழச்சிவல்பட்டிக்குள் பஸ்கள் வந்து செல்வது குறைந்தது. இதனால் கீழச்சிவல்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர், கல்லுாரி,பள்ளி மாணவ,மாணவியர் போக்குவரத்து நெருக்கடியில் தவித்தனர். இது குறித்து வக்கீல் முருகேசன் பிப். 2024ல் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.விசாரணைக்கு பின்னர் பஸ்கள் கீழச்சிவல்பட்டி வந்து செல்ல கோர்ட் உத்தரவிட்டது. அதன் பின்னரும் பஸ்கள் கீழச்சிவல்பட்டிக்குள் வரவில்லை. இதனையடுத்து மீண்டும் கோர்ட்டில் இது குறித்து தெரிவிக்கப்பட்டது. தற்போது பஸ்கள் வந்து செல்வதை ஆய்வு செய்ய கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து கீழச்சிவல்பட்டிக்குள் பஸ்கள் வந்து செல்வதை உறுதி செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தினர் உத்தர விட்டுள்ளனர்.