நான்கு வழிச்சாலையில் சிசிடிவி கேமரா மாயம்
திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் குற்றவாளிகளை கண்டறியவும், விபத்துகளை தடுக்கவும் பொருத்தப்பட்ட 'சிசிடிவி' கேமராக்கள் மாயமானதால் போலீசார் பெரும் தவிப்பிகுள்ளாகியுள்ளனர்.மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான 72 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் இச்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிரித்து வருகின்றன. திருப்புவனம் வட்டாரத்தில் அடிக்கடி செயின் பறிப்பு, டூவீலர் திருட்டு, வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். நான்கு வழிச்சாலையில் எங்குமே சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் குற்றச்சம்பவங்கள் கண்டறிய முடியாமல் கிடப்பில் போடப்பட்டன. இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கீழடி, சக்குடி, நரிக்குடி விலக்கு உள்ளிட்ட இடங்களில் ரூ.5 லட்சம் செலவில் மானாமதுரை வரை 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. திருப்புவனத்தில் பொருத்திய கேமராக்கள் அனைத்தும் திருப்புவனம் போலீஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் சக்குடி விலக்கில் பொருத்தப்பட்ட நான்கு கேமராக்கள் மட்டும் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்குடி விலக்கு முக்கியமான சந்திப்பாகும். சிவகங்கையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்பவர்கள் பூவந்தி, சக்குடி வழியாக நான்கு வழிச்சாலைக்கு வருவது வழக்கம். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாதையை கடப்பதால், அடிக்கடி சக்குடி விலக்கில் விபத்துகள், வழிப்பறி சம்பவங்களும் நடைபெறும். இதனால், குற்றவாளிகளை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.