தமிழக வளர்ச்சியை ஏற்ற மத்திய அரசு அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
சிவகங்கை : மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கருத்து வேறுபாடு இருப்பினும் தமிழகம் வளர்ந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளனர், என சிவகங்கையில் நடந்த விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். சிவகங்கை காந்திவீதியில் மத்திய கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டடம் ரூ.3.23 கோடியில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி வரவேற்றார். துணை பதிவாளர்கள் பாபு, செந்தில்குமார், பாலு, ஜெய்சங்கர், பாரதி, நகராட்சி தலைவர் துரைஆனந்த், துணை தலைவர் கார்கண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ராமநாதன், ஜெயகாந்தன், அயூப்கான் பங்கேற்றனர். வங்கிகள் மீது கலெக்டர் அதிருப்தி கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்து பேசியதாவது: மாவட்ட அளவில் மகளிர் உரிமை தொகை 2.50 லட்சம் பேர் பெறுகின்றனர். ஆனால், கூட்டுறவு வங்கிகளில் 17 ஆயிரம் மகளிர் தான் சேமிப்பு கணக்கு துவக்கியுள்ளனர். தமிழ் புதல்வன் திட்டத்தில் 600 கணக்கு, முதியோர் உதவி தொகை 1500 சேமிப்பு கணக்குகள் மட்டுமே உள்ளன. கூட்டுறவு வங்கிகள் சிரத்தை எடுத்து, அரசின் இலவச திட்டங்களை பெறும் பயனாளிகள், வங்கி சேமிப்பு கணக்குகளை அதிகளவில் கூட்டுறவு வங்கிகளில் துவக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் வளர்ச்சியை ஏற்ற மத்திய அரசு அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: தமிழக கூட்டுறவு சங்கசாதனைக்காக மத்திய அரசு 5 விருது வரை வழங்கியது. மாவட்டத்தில் உள்ள 32 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் 15 மட்டுமே சொந்த கட்டடத்தில் இயங்குகிறது. மாநில அளவில் 24 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. 100 சதவீத லாபம் ஈட்டிய வங்கிகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் தமிழ்நாடு வளர்ந்துள்ளது என்ற உண்மையை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது, என்றார். பொது மேலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.சிவகங்கை கிளை மேலாளர் போஸ் தலைமையில் அலுவலர்கள் ஏற்பாட்டை செய்திருந்தனர்.