உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் சம்பக சஷ்டி விழா நிறைவு

திருப்புத்துாரில் சம்பக சஷ்டி விழா நிறைவு

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு ஆறுநாட்கள் நடந்த சம்பக சஷ்டி விழா நிறைவடைந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சம்பக சஷ்டி விழா டிச. 1ல் அஷ்ட பைரவ யாகத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை என 6 நாட்கள் தொடர்ந்து யாகம் நடந்தது.கோயில் சிவாச்சார்யார்கள் பைரவகுருக்கள், ரமேஷ்குருக்கள், பாஸ்கர குருக்கள் ஆகியோர் யாக பூஜைகளை நடத்தினர். 10ம் கால யாகத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தீபாராதனையை தரிசித்தார். நிறைவு நாளான நேற்று காலை யாகம் நடந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு 12ம் கால யாகம் துவங்கியது.யாகம் நிறைவுக்கு பின் பூர்ணாகுதியைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் சிவாச்சார்யார்களால் பிரகாரம் வலம் வந்து மூலவர் யோகபைரவர் சன்னதிக்கு சேர்க்கையானது. தொடர்ந்து 16 வகையான திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கவசத்தில் சந்தனக் காப்பில் சுவாமி அருள்பாலிக்க, சிறப்பு பூஜைகள் நடந்து அலங்காரத் தீபாரதனையை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாட்டினை சம்பக சஷ்டி விழாகுழு மற்றும் தேவஸ்தானத்தினர் செய்தனர்.ந.வயிரவன்பட்டியில் வளரொளிநாதர்,வயிரவ சுவாமி கோயிலில் டிச.1 முதல் சம்பக சஷ்டி விழா நடந்தது. தினசரி மாலை வயிரவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது ஐந்தாம் நாளில் விடுதி எழுந்தருளலும் நடந்தது.நேற்று சம்பக சஷ்டி நிறைவை முன்னிட்டு நேற்று இரவு உற்ஸவர் அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின்னர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி திருவீதி வலம் வந்து சூர சம்ஹாரத்தை வயிரவர் நிகழ்த்தினார். ஏற்பாட்டை நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ