உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊராட்சி செயலர் தேர்வு முறையில் மாற்றம்; சங்கத்தினர் வரவேற்பு: இளைஞர்கள் எதிர்ப்பு

ஊராட்சி செயலர் தேர்வு முறையில் மாற்றம்; சங்கத்தினர் வரவேற்பு: இளைஞர்கள் எதிர்ப்பு

இளையான்குடி; தமிழகத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் வரவேற்றுள்ள நிலையில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த வேலைவாய்ப்பற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு கீழ் செயல்படும் ஊராட்சி மன்றங்களில் உள்ள பணிகளை ஊராட்சி செயலாளர்கள் கவனித்து வருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் 12,475 க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் 25 ஊராட்சிகளை அந்தந்த ஊராட்சி பகுதி அருகில் உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளோடு இணைத்ததை தொடர்ந்து தற்போது 12,450 ஊராட்சி செயலாளர்கள் பணியில் உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 51 ஊராட்சி செயலாளர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 1483 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.இதனை நிரப்ப கடந்த அக்.10ம் தேதியிலிருந்து வரும் நவ.9ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஊராட்சி செயலாளர்கள் தேர்வு செய்யப்படும் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, விண்ணப்பதாரர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்ணை 85 சதவீதமாக கொண்டும், நேர்காணலில் பெறப்படும் 15 சதவீத மதிப்பெண்ணை கொண்டும், அந்தந்த மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆண்,பெண் மற்றும் இட ஒதுக்கீடு, முன்னுரிமை பட்டியலை கொண்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஊராட்சி செயலாளர்கள் சங்க சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: கடந்த காலங்களில் ஊராட்சி செயலாளர்கள் தேர்வு செய்யும் போது அந்தந்த ஊராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட காலமாக ஒரே ஊராட்சியில் பணி செய்து வந்ததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மேலும் தேர்வு செய்யப்படுவதிலும் முறைகேடு நடைபெற்றதால் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வதற்காக தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம்.தற்போது ஒரே ஊராட்சியில் 3 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டு வருகிறது. ஆகவே தற்போது தேர்வு செய்வதற்காக கொண்டு வரப்பட்ட மாற்றத்தால் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஊராட்சி செயலாளர்களாக நியமனம் செய்ய வாய்ப்புள்ளதால் அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். அதே நேரத்தில் ஊராட்சி செயலாளர் பணிகளுக்காக விண்ணப்பம் செய்துள்ள கிராமப்புறங்களை சேர்ந்த வேலை வாய்ப்பற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்பு தேர்வு செய்யப்பட்டதை போல் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களை சேர்ந்தவர்களை தேர்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி